இந்தியாவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தை தாம் கடுமையாக கண்டிப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது பாரிய மனித உரிமை மீறலாகும் என்றும், இருநாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எந்த நாட்டின் அடிப்படை பொறுப்பும் மக்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதி செய்வதாகும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த மனிதாபிமானமற்ற செயலை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்திய மீனவர்கள் நீண்ட காலமாக இலங்கையின் கடல் எல்லையை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த போதிலும், இலங்கை மீனவர்கள் பல சந்தர்ப்பங்களில் அவர்களுடன் சகோதரத்துவ உணர்வுடன் நடந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இவ்வாறான ஒழுங்கற்ற மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக இலங்கையின் கடல் வளங்களும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இந்திய அதிகாரிகளுடன் பல மட்டங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கூட்டு நடவடிக்கை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உடனடியாக நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.




